
எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த மூன்று சூப்பர் ஹிட் படங்களான நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவற்றின் முழு உரிமையும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
எம்.ஜி.ஆர் தனது எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து நடித்த படங்கள் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன்.
இந்த 3 படங்களையும் திரையிடும் உரிமை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சேலம் சாந்தி பிலிம்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம், சேலம் கற்பகம் சர்க்யூட் உரிமையாளர் கவிதா, எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிர்வாகி நிர்மலா ரவீந்திரன் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த 3 படமும் எங்களுக்குத்தான் சொந்தம், எங்களைத் தவிர வேறுயாரும் இந்தப் படங்களை வெளியிடக்கூடாது என இவர்கள் தங்கள் மனுக்களில் வலுயுறுத்தியிருந்தனர்.
நீதிபதி எம்.ஜெயபால் இவற்றை விசாரித்தார். இந்த 3 படங்களையும் திரையிட சாந்தி பிலிம்ஸுக்கும், கற்பகம் சர்க்யூட் நிறுவனத்துக்கும்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பு கூறினார்.
இதை எதிர்த்து, எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதில், இந்தப் படங்கள் அனைத்தும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்து சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் ஆகியோர் எதிர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள்.
இந்த வழக்கில் இருதரப்பிலும் தாக்கல் செய்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் தாக்கல் செய்த ஆவணங்கள் தவறானது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே இந்த 3 படங்களும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸுக்கே சொந்தம். அவர்கள் இந்த 3 படங்களையும் திரையிடலாம் என்று அனுமதி அளிக்கிறோம், என தீர்ப்பு கூறிவிட்டனர் நீதிபதிகள்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்குப் போகப்போவதாக சாந்தி பிலிம்ஸ், கற்பகம் சர்க்யூட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது




